சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள ஸ்டிராங் ரூம் கண்காணிப்பு காமிராக்களில் 2 கேமராக்கள் பழுதாகி உள்ளது தெரிய வந்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்நாட்டில், இந்த முறை இதுவரை இல்லாத அளவுக்கு வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்டிராங் ரூம் காமிராக்கள் பழுதாகி வருகின்றன. இது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. ஆனால், காமிராக்கள் பழுதுக்கு அதிக வெயில் காரணம் என்றும், மழை காற்று காரணம் என்று காரணங்களை அரசு அதிகாரிகள் கூறி வருகின்றனர். இது கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தென் சென்னை மக்களவை தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் 2 கண்காணிப்பு கேமராக்கள் பழுதாகி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள ஸ்டிராங் ரூம் கண்காணிப்பு பணிக்காக மொத்தம் 210 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள நிலையில், பலத்த காற்றுடன் மழை பெய்ததால் 2 கேமராக்கள் பழுதாகின. தேர்தல் ஆணைய அதிகாரிகள் மேற்பார்வையில் புதிய கேமராக்கள் பொருத்தப்பட்டன.
சென்னையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தென் சென்னை, வட சென்னை, மத்திய சென்னை மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம், லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரியில் பலத்த பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்த மூன்று மையங்களிலும் ஜூன் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, கோவை, திருப்பூர், ஈரோடு, விழுப்புரம் மற்றும் தென்காசி போன்ற பகுதிகளில் சிசிடிவி கேமிராக்கள் பழுதான நிலையில், தற்போது, சென்னையில் பழுதாகி உள்ளது.
வாக்குப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் உள்ள காமிராக்கள் அடிக்கடி பழுதாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.