சென்னை: மத்திய அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வந்த 2 முதுகலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்தியுள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்புடன் எம்.டெக் கம்ப்யூட்டஷனல் பயாலஜி, எம்.டெக் பயோ டெக்னாலஜி பாடப்பிரிவுகள் உள்ளன. கடந்த ஆண்டுகளில் இந்த படிப்புகளில் மத்திய அரசின் 50 சதவிகிதம் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது.
ஆனால் இந்த ஆண்டு தமிழக அரசின் 69 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கையை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது. இந் நிலையில் தற்போது இந்த 2 படிப்புகளிலும் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்துவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மத்திய அரசுக்கு 50 சதவீதம் இடம் வழங்குவதை ஏற்க முடியாது என்று தெரிவித்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தமது இணைய தளத்தில் அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டு இருக்கிறது.
2 படிப்புகளில் எம்டெக் பயோ டெக்னாலஜி படிப்பானது 1985ம் ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ளது. 2014-15ம் ஆண்டில் எம்.டெக் கம்ப்யூட்டஷனல் பயாலஜி படிப்பு கொண்டு வரப்பட்டது. இந்த படிப்பில் ஆண்டு தோறும் 45 மாணவர்கள் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு மாதம் 12500 ரூபாய் வரை உதவி தொகையும் வழங்கப்பட்டு வந்தது.