சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி மார்ச் 27-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
சுமார் 25 லட்சம் சதுர அடியில் 2,400 கோடி ரூபாய் செலவில் சென்னை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த விமான முனையத்தின் முதல் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது.
இன்னும் ஓராண்டில் இந்த ஒருங்கிணைந்த முனையம் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்ததும் பயணிகளின் எண்ணிக்கை 2.2 கோடியில் இருந்து 3.5 கோடியாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய முனையத்தின் கட்டுமானப் பணிகள் ஏறக்குறைய நிறைவடைந்து, பயணிகளின் உடமைகளைக் கையாள்வதற்கும், விரைவாகச் சரிபார்ப்பதற்கும், உடமைகளை அனுப்புவதற்கும் இயந்திரங்கள் நிறுவப்பட்டு, அவை கடந்த வாரத்தில் சோதனை செய்யப்பட்டன.
இந்த மாத இறுதியில் தமிழகம் வரும் பிரதமர் மோடி மதுரையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்றும் அந்த நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மார்ச் 27 ம் தேதி சென்னை வரும் பிரதமர் விமான நிலைய புதிய கட்டிடத்தை திறந்து வைக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.