சென்னை

ந்திர மாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவர் வாட்ஸ்அப்பில் அவருக்கு வந்த வாய்ஸ் மெசேஜ் தேச விரோதமானது என்னும் குற்றத்தின் கீழ் சென்னை விமான நிலைய போலீசால் கைது செய்யப்பட்டு பின் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர் தடிகலா அக்பர் சலீம் (வயது 36).  இவர் அரபு நாட்டில் இருந்து வரும் தன் நண்பரை வரவேற்க சென்னை விமானநிலையம் சென்றுள்ளார்.  அப்போது அவருடைய நண்பர் அனுமதிக்கப்பட்ட அளவை விட மிக அதிகமான அளவில் அரேபியாவில் இருந்து தங்கம் கொண்டு வந்திருந்தது கண்டுபிடிக்கப் பட்டது.  விசாரணைக்கு நண்பருடன் சலீமும் அழைத்துச் செல்லப்பட்டார்,  அவரை சோதனைக்குள்ளாக்கியதில் அவருடைய மொபைலில் இருந்த வாட்ஸ்அப் ஆடியோ மெசேஜ் ஒன்றை கஸ்டம்ஸ் கண்டுபிடித்தனர்.

அதில் டில்லியில் உள்ள ஜந்தர் மந்தருக்கு அனைத்து இஸ்லாமியர்களும் வரவேண்டும் எனவும், இஸ்லாமியர்களின் பலம் என்ன என்று காட்டவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  எந்த தேதியில் கூட வேண்டும் என குறிப்பிடப் படவில்லை.  இந்த செய்தி மலேசியா நாட்டில் உள்ள உலாமா இ ஹிந்த் என்னும் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த மவுலானா ஆசாத் மதானி சாகிப் என்பவரால் வெளியிடப்பட்டுள்ளது.  இது இஸ்லாமியர்களின் பலத்தை முதன் முதலாக அனைவருக்கும் காட்டுவதற்காக கூட்டப்படும் கூட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதைக் கண்ணுற்ற கஸ்டம்ஸ் அதிகாரிகள் ஏர் போர்ட் போலிசுக்கு தகவல் தெரிவித்தனர்.  சலீம் தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப் பட்டார்.  வாட்ஸ்அப் மெசேஜை தவிர வேறு எதுவும் அவர் தேச விரோத செயலில் ஈடுபட்டதற்கான சாட்சியங்கள் இல்லை எனக்கூறி அவரிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு நீதிமன்றம் அவரை விடுதலை செய்துள்ளது.  விடுதலை அடைந்த சலீம் நேராக கடப்பாவுக்கு போலீசால் அனுப்பி வைக்கப்பட்டார்.