தண்டேவாடா, சத்தீஸ்கர்
சத்தீஸ்கர் மாநிலம் தேர்தல் பிரசாரத்தின் போது மாவோயிஸ்டுகள் தாக்குதலில் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பிமா மாண்டவி உள்ளிட்ட நால்வர் மரணம் அடைந்துள்ளனர்.
நடைபெற உள்ள மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறுகிறது. இதில் சத்தீஸ்கர் மாநிலம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் உள்ள 91 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் பல இடங்களில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கான இறுதிப் பிரசாரங்களை நடத்தி முடித்துள்ளனர்.
சத்தீஸ்கர் மாநிலத்தில் தண்டேவாடா பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடித்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் பீமா மாண்டவி தனது ஆதரவாளர்களுடன் திரும்பி வந்துக் கொண்டிருந்தார். அங்கு மறைந்திருந்த மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் இந்த வாகனங்கள் மீது சக்தி வாய்ந்த குண்டுகள் மற்றும் துப்பாக்கியாலும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் பீமா மாண்டவியும் அவருடன் சென்ற 4 காவலர்களும் மரணம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை மறுநாள் தேர்தல் நடைபெறும் வேளையில் இந்த தாக்குதல் சம்பவம் நிகழ்ந்துள்ளதால் மக்கள் கடும் பீதி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.