ராய்ப்பூர்

த்தீஸ்கர் மாநிலத்தில் மதிய உணவில் வழங்கப்படும் முட்டைகளுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் பணம் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கிராமப்புற குழந்தைகள் சத்துக்குறைவால் துயருறுவதால் அவர்களுக்கு முட்டைகள் வழங்க உத்தரவிட்டார்.   இதற்காக ரூ.40 கோடி நிதி உதவி கோரி முதல்வர் மத்திய அரசுக்குக் கோரிக்கை விடுத்தார்.

அந்த நிதி உதவி வரும் வரை அங்கன்வாடி ஊழியர்கள் தங்கள் சொந்தப் பணத்தில் முட்டைகள் வாங்க வேண்டும் எனவும் நிதி வந்தவுடன் இந்த தொகை திரும்பத் தரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.     இந்த திட்டம் கடந்த செப்டம்பர் மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.   ஆனால் மத்திய அரசு நிதி உதவி அளிக்க மறுத்துள்ளது.

இதனால் கடந்த மூன்று மாதங்களாக ஊழியர்கள் முட்டை வாங்கச் செலவழித்த தொகை திரும்ப வராத நிலை ஏற்பட்டுள்ளது.   அது மட்டுமின்றி அவர்களுக்குக் கடந்த இரு மாதங்களாக ஊதியமும் வழங்கப்படவில்லை.    இதனால் சராசரியாக ஒவ்வொரு அங்கன்வாடி ஊழியரும் மாதத்துக்கு சுமார் ரூ.3500 வரை செலவழித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் அங்கன்வாடி ஊழியர்கள் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்தம் செய்தனர்.  அப்போது அவர்களில் பலர் பணியிடை நீக்கம் செய்யபட்டுளனர்.   அதன் பிறகு மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.  அந்த கால கட்டத்தில் ஊதியம் கிடைக்காத நிலையில் இருந்த ஊழியர்கள் தற்போது முட்டைக்குச் செலவழித்த தொகையும் திரும்ப கிடைக்காத நிலை உள்ளது.

இது குறித்து செய்தியாளர்கள் சத்தீஸ்கர் மாநில மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் அனிலா பேந்தியா விடம் கேட்டுள்ளனர்.   ஆனால் பல முறை முயன்றும் அவர்களால் இதற்கான பதிலைப் பெற முடியவில்லை.   எனவே ஊழியர்களுக்கு அவர்கள் செலவழித்த தொகை கிடைக்காதது தொடர்கதையாக உள்ளது. அத்துடன் கிடைக்குமா என்பதும் விடை தெரியாத விடுகதையாக உள்ளது.

[youtube-feed feed=1]