பாட்னா: பிரதமர் மோடிக்கு ஹோலிப் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ள சத்ருகன் சின்ஹா, பதிலளிக்கப்படாத கேள்விகள் குறித்தும், பிரதமருக்கு நினைவூட்டியுள்ளார்.
பாட்னா சாஹிப் நாடாளுமன்ற தொகுதியின் பாரதீய ஜனதா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்ருகன் சின்ஹா. ஆனால், தற்போது மிகத் தீவிரமான மோடி எதிர்ப்பாளராக செயல்பட்டு வருகிறார்.
மோடிக்கான செய்தியில் அவர் கூறியுள்ளதாவது, “பிரதமர் அவர்களே, உங்களுக்கு ஹோலி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். பணிவுடனும், அதேநேரத்தில் உறுதியுடனும் உங்களுக்கு ஒன்றை நினைவுபடுத்த விரும்புகிறேன். செளகிதார் பிரச்சாரத்தின் மூலம் நீங்கள் உங்களை எந்தளவு தற்காத்துக் கொள்கிறீர்களோ, அந்தளவிற்கு, பதிலளிக்கப்படாத கேள்விகள் குறித்து நாட்டு மக்களும் விழிப்புடன் இருக்கிறார்கள்.
ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பாகவும் அறிவதற்கு ஆவலாக இருக்கிறார்கள். செளகிதார் கோஷத்தை நீங்கள் உயர்த்திப் பிடிக்கலாம். ஆனால், உண்மையான செளகிதார்களும் (காவல்காரர்கள்), மக்களும் நாட்டில் தற்போது நல்ல நிலைமையில் இல்லை.
தயவுசெய்து, இதுபோன்ற பிரச்சார கோஷங்களை விட்டுவிட்டு, நீண்டகாலமாக நிலுவையில் இருக்கும் விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்” என்றுள்ளார்.
– மதுரை மாயாண்டி