சென்னை: வடசென்னையின் திருவொற்றியூர் பகுதியில் உள்ள  தனியார் கிறிஸ்தவ பள்ளியில்  இன்று மதியம் விஷ வாயு கசிவால் 35 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர்.

திடீர் வாயு கசிவு அந்த பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  பள்ளியில் எப்படி வாயு கசிவு ஏற்பட்டது என வினவி வரும் நிலையில்,  திருவொற்றியூரை சுற்றி ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளதால், அங்கிருந்து வாயு கசிந்ததா  என விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவொற்றியூர்  கிராம தெருவில் இயங்கி வருகிறது விக்டோரியா என்ற தனியார் கிறிஸ்தவ பள்ளி. இதில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மூன்று அடுக்கு மாடி கொண்ட கட்டடத்தில் இன்று  மதிய வேளையில்   மூன்றாவது தளத்தில்  இருந்த மாணவ மாணவிகள் மூச்சுத் திணறி திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்த தகவல் அறிந்த ஆசிரியர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் மயங்கமடைந்த   35க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை  ஆம்புலன்ஸ் மூலமாக அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்தனர்.  ஒரு சிலர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும், பெரும்பாலான மாணவ மாணவிகள் முதலுதவி சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறையினர் பள்ளியில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளியில் எப்படி வாய்வு கசிவு ஏற்பட்டது என  பள்ளி நிர்வாகத்தினரிடம் விசாரணை நடத்தப்பட்டதாகவும், அந்த பகுதியில் ஏராளமான ரசாயன ஆலைகள் செயல்பட்டு வருவதால், அங்கிருந்து வாயு கசிந்ததா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

திருவொற்றியூர் பகுதியில் திடீர் வாயு கசிவு ஏற்பட்ட விவகாரம் அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு டிசம்பரில் எண்ணூர் பகுதியில் உள்ள தனியார் ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயு கசிவு காரணமாக 42 பேர் பாதிக்கப்பட்டதும், அதைத்தொடர்ந்து ஆலையை மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.