டில்லி
வரும் 14ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ அறிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ பூமியில் இருந்து 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் நிலவு குறித்து ஆய்வு செய்யத் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2008-ம் ஆண்டு அக்டோபர் 22-ந் தேதி நிலவுக்கு ‘சந்திரயான்-1’ என்ற விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது உலக நாடுகளை ஆச்சரியத்தில் தள்ளியது.
சந்திரயான் 1 நிலவில் செய்த ஆய்வில் அங்குத் தண்ணீர் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டமிட்டதால் கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி சந்திரயான்-2 விண்கலம் நிலவுக்கு அனுப்பப்பட்டது.
தென் துருவத்தில் விக்ரம் லேண்டரின் மெதுவான தரையிறக்கம் (சாப்ட் லேண்டிங்) சவாலாக மாறியது. கடைசி கட்டத்தில் சந்திரயான்-2 நிலவில் இறங்கும் போது அதன் கட்டுப்பாட்டை இழந்து நிலவுடன் மோதியது.
ஆயினும் சந்திரயான்-2 பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தோல்வியில் துவண்டுவிடாமல் தொடர்ந்து ரூ.615 கோடி செலவில் சந்திரயான்-3 திட்டம் அறிவிக்கப்பட்டு தற்போது பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் நிறைவு செய்து உள்ளனர்.
மார்க்-3 ராக்கெட்டில் சந்திரயான்-3 விண்கலம் பொருத்தப்பட்டு விண்ணில் ஏவப்பட உள்ளது. சுமார் 43.5 மீட்டர் நீளமும், 640 டன் எடையும் கொண்ட திட, திரவ, கிரையோஜெனிக் என 3 நிலைகளில் எரிபொருள் உதவியால் இந்த ராக்கெட் விண்ணில் பாயு தயார் நிலையில் உள்ளது.
சந்திரயான்-3 விண்கலம் வரும் 14ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது என இஸ்ரோ அறிவித்துள்ளது . இதன்படி ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து அதிக எடையைத் தாங்கி செல்லும் மார்க்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் வரும் 14-ந் தேதி விண்ணில் பாய்கிறது.