ஸ்ரீஹரிகோட்டா:
தொழில்நுட்ப கோளாறு காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட சந்திராயன்-2 விண்கலம் வரும் 22ந்தேதி மதியம் 2.43 மணிக்கு மீண்டும் விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.
நிலவை ஆய்வு செய்ய சந்திராயன்-2 விண்கலத்தை இஸ்ரோ தயாரித்து வந்தது. அதைக்கொண்டு, நிலவின் தென் துருவ பகுதியை உலகில் முதன் முறையாக, ஆய்வு செய்யப்போவதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
3.8 டன் எடை கொண்ட சந்திராயன் 2 விண்கலம், பிஎஸ்எல்வி மார்க்3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட உள்ளது. இந்த விண்கலத்தில் 13 வகையான அறிவியல் ஆய்வு கருவிகள் பொருத்தப் பட்டு இருப்பதாகவும், இந்த விண்கலம் திட்டமிட்டப்படி நிலவில் தரையிறங்கும் என்றும் இஸ்ரோ அறிவித்து உள்ளது.
சந்திராயன் 2 விண்கலம், ஏற்கனவே அறிவித்தப்படி கடந்த 15ந்தேதி அதிகாலை 2:51க்கு விண்ணில் செலுத்த தயாரான நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, கவுன்டவுன் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், வரும் 22ந்தேதி சந்திராயன்-2 விண்கலத்தை மீண்டும் விண்ணுக்கு செலுத்து கிறது. 22ந்தேதி திங்கட்கிழமை மதியம் 2.43 மணி அளவில் திட்டமிட்டப்படி சந்திராயன்-2 விண்ணில் ஏவப்படும் என்று இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.