சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி தி.மு.க. வேட்பாளராக சந்திரகுமார் பெயரை திமுக தலைமை அறிவித்து உள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரஸ் கட்சி திமுகவுக்கு தாரைவார்த்துள்ள நிலையில், திமுக வேட்பாளராக முன்னாள் தேமுதிக நிர்வாகி சந்திரகுமார் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. இவர் ஏற்கனவே தேமுதிகவில் பணியாற்றி எம்எல்ஏவாக இருந்த நிலையில், பின்னர், கட்சி தலைமை மீதான அதிருப்தி காரணமாக, அங்கிருந்து விலகி திமுகவில் இணைந்து பணியாற்றி வந்தார். தற்போது அவருக்கு இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை திமுக தலைமை கொடுத்துள்ளது.
முன்னதாக ஈரோடு கிழக்கு தொகுதி எம்..எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா, திடீரென்று ஏற்பட்ட உடல்நலக்குறைவால் கடந்த 2023-ம் ஆண்டு மரணம் அடைந்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் அவரது தந்தையான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். ஆனால் அவரும் உடல்நலக்குறைவு காரணமாக 2024ம் ஆண்டு டிசம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு பிப்ரவரி 5-ந் தேதி இடைத்தேர்தலும், பிப்ரவரி 8ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கலும் நேற்று தொடங்கியது.
இந்த நிலையில், ஈஈரோடு கிழக்கு தொகுதியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே வேட்பாளரை இறக்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் சஞ்சய் சம்பத் குமார் களம் இறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அரசியலில் கால் பதிக்க விருப்பம் தெரிவிக்காததால், காங்கிரஸ் கட்சி வேட்பாளரை அறிவிப்பதில் தயக்கம் காட்டியது.
இதற்கிடையில், அங்கு கள ஆய்வுக்கு சென்ற முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டானிடம் கட்சி நிர்வாகிகள் திமுக போட்டியிட வேண்டும் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து, அங்கு திமுக போட்டியிடும் வகையில், அகில இந்திய காங்கிரஸ் தலைமையிடம் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் திமுகவுக்கு சாதமான பதில் கிடைத்தது. இதையடுத்து திமுக சார்பில் போட்டியிடும் என தகவல்கள் பரவின. இதையடுத்து திமுக தலைமையும், வரும் 20ந்தேதி முதல் திமுக நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அங்கு களம் இறங்குவார்கள் என தெரிவித்தது.
இந்த நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தி.மு.க. வேட்பாளரை தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அதன்படி, . ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க.வின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சந்திரகுமார் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.