ஐதராபாத்:

கிராமப் புறங்களில் உள்ள மலிவு விலை பொது விநியோக கடைகளை ‘கிராம மால்கள்’ ஆக மாற்ற ரிலையன்ஸ் ரீடெயில் மற்றும் ஃப்யூச்சர் குழுமத்துடன் ஆந்திரா அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

கடந்த ஆண்டு முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்தினர் பங்குதாரராக உள்ள ஹெரிடேஜ் புட்ஸ் நிறுவன சில்லரை வணிகத்தை ஃப்யூச்சர் ரீடெயில் நிறுவனம் வாங்கியது. தற்போது ரிலையன்ஸ் மற்றும் ஃப்யூச்சர் நிறுவனங்கள் கிராம மால்களில் பங்குதாரர்களாகியுள்ளன.

மாநிலம் முழுவதும் 29 ஆயிரம் மலிவு விலை கடைகள் உள்ளன. இதில் 6 ஆயிரத்து 500 கடைகள் முதல் கட்டமாக மறைந்த முன்னாள் முதல்வர் என்.டி. ராமராவ் பெயரில் ‘அண்ணா கிராம மால்கள்’ என மாற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நடந்த உயர்மட்ட ஆய்வு குழு கூட்டத்தில் பொது விநியோக துறையினர் அண்ணா கிராம மால்களை கவர்ச்சிகரமான முறையில் மாற்றவும், இதற்கென்று சிறப்பு முத்திரையையும் உருவாக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

மகளிர் சுய குழுவின் உற்பத்தி பொருட்கள், கிரிஜன் கூட்டுறவு கழக பொருட்கள், விவசாயிகளிடம் இருந்து நேரடியாக பெறப்பட்ட பொருட்கள் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த அண்ணா கிராம மால்களில் யார் வேண்டுமானாலும் அவர்களது பொருட்களை விற்பனை செய்யலாம் என்றும் நாயுடு தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஆய்வு கூட்டத்தில் 4 ஆயிரத்து 599 மலிவு விலை கடைகளின் டீலர்ஷிப் இடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளது. இதை விரைந்து நிரப்ப முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.