சென்னை: சென்னை உள்பட வடதமிழக கடலோர பகுதிகளில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியது முதலே பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மாதம் தொடக்கத்தில் சென்னை உள்பட பல பகுதிகளில் மழை தீவிரமாக பெய்த நிலையில், தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளது. வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமானதைத் தொடர்ந்து, சென்னை உள்பட வடகடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. இதனால் சென்னை உள்பட 24  மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக  இந்திய வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள தகவலில்,  வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது உள்ளது. இதனால் வடதமிழக கடலோர பகுதிகள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உள்ளது.

வடதமிழகம், புதுச்சேரியில் இன்றும், நாளையும் அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், வரும் 15ம் தேதி வரை கனமழை பெய்யும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழக-புதுச்சேரி கடற்கரை பகுதியில் 12-ம் தேதி அதிகாலை கரையை கடக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.