திருவனந்தபுரம்: கேரளாவில் டிசம்பர் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலில் மன்னார் வளைகுடா அருகே நிலைகொண்டிருந்த புரெவி புயல் கரையை கடந்தது. ஆனாலும், தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலோர பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, கேரளாவிலும் சில மாவட்டங்களில் தொடர்ந்து மழை கொட்டி வருகிறது. இந் நிலையில் கேரளாவில் சில இடங்களில் டிசம்பர் 5 முதல் 7ம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக கேரள தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பொழியூர் முதல் கோழிக்கோடு வரயிலான கடலோரப் பகுதிகளில் 1.5 முதல் 3.2 மீட்டர் உயரம் வரை அலைகள் வீசிவருகின்றன. 47 முதல் 64 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. இந்த காற்றின் வேகம் மழையின் போது மேலும் அதிகரிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.