உலகக்கோப்பைக்கு இணையாகக் கருதப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த போட்டி 2013 ஆண்டுக்குப் பிறகு 8வது முறையாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாடுகளில் நடைபெறுகிறது.
இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, நியூசிலாந்து,இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகள் இந்த தொடரில் இடம் பெற்றுள்ளன.
தரவரிசைப்பட்டியலில் இடம்பெறாததால் மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்த தொடரில் இடம் பெறவில்லை.
லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் ஆட்டம் குரூப் A அணிகளான இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நேற்று நடைபெற்றது.
டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி வங்கதேச அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பால் மற்றும் சவுமியா சர்க்கார் ஆகியோர் களமிறங்கினர்.
38வது ஓவர் முடிவில் தமீம் இக்பால் சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் சதத்தை பதிவு செய்தார். அதைத்தொடர்ந்து முஷிபுர் ரஹிம் 79 ரன்களில் ஆட்டமிழக்க, தமீம் இக்பால் 128 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 50 ஓவர்களின் 6 விக்கெட்டுகளை இழந்து 305 ரன்கள் இலக்குடன் வெளியேறியது.
இங்கிலாந்து தரப்பில் ப்ளன்கெட் 10 ஓவர்கள் வீசி 59 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
306 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சைத் தொடங்கியது.
ராய் மற்றும் ஹேல்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். ஒரு ரன் எடுத்திருந்த நிலையில் ராய் ஆட்டமிழக்க இங்கிலாந்துக்கு தொடக்கமே ஆட்டம் கண்டது.
இருந்தாலும் ஹேல்ஸ் மற்றும் ஜோ ரூட் இணை நிதானமாக ஆடி ரன்களை குவித்தது. சதமடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் ஹேல்ஸ் 95 ரன்னில் சன்சாமுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறியது பரிதாபமாக இருந்தது.
அடுத்து இறங்கிய மோர்கன், ஜோ ரூட் இணை தனது நிதானமான ஆட்டத்தை மீண்டும் தொடர்ந்தது. 42வது ஓவரின் இறுதியில் ரூட் தனது பத்தாவது சதத்தை பதிவு செய்தார்.
47.2 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டி 308 ரன்களை எடுத்து இங்கிலாந்து அணி தனது முதல்வெற்றியை பதிவு செய்தது.
129 பந்துகளுக்கு 11 பவுண்டரி மற்றும் 1 சிக்சர்களுடன் 133 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
தொடரின் முதல் போட்டியில் தனது முதல் வெற்றியை பதிவு செய்ததன் மூலம் இங்கிலாந்து அணி 2 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.
சாம்பியன்ஸ் ட்ராபி போட்டியின் குரூப் A அணிகளான நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான அடுத்த ஆட்டம் பிர்மிங்ஹாம் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.