சென்னை: மருத்துவ கலந்தாய்வில் பங்கேற்ற மாணாக்கர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு இன்று தொடங்குகிறது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு 3 நாட்கள் நடைபெற உள்ளது. தேர்வு செய்யப்பட்ட மாணாக்கர்கள் பிப்ரவரி 17 முதல் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் அசல் சான்றிதழை சமர்பித்து தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மருத்து கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்றும் மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் , எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஏற்கனவே நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன. பொதுப்பிரிவுக்கான கலந்தாய்வு ஜனவரி 27–ந் தேதி தொடங்கி நடைபெற்றது. இந்த கலந்தாய்வு ஆன்லைன் மூலமே நடைபெற்றது.
மருத்துவ படிப்பில் பொதுப்பிரிவு முதற்கட்ட கலந்தாய்வில் பங்கேற்றவர்களில் 6,082 மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, தேர்வான 6082 மாணாக்கர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு இன்று முதல் 10ம் தேதி வரை நடைபெறுகிறது.
சான்றிதழ் நடைபெறும் தேதி மற்றும் இடம் விவரம் ஆன்லைனில் அறிவிக்கப்பட்டு உள்ளதாகவும், மாணாக்கர்கள் அதை பார்த்து தெரிந்துகொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட விபரங்கள் குறித்த அறிவிப்பு பிப்ரவரி 15 ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும், அதை பிப்.16 ஆம் தேதி மாணவர்கள் இதனை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பிப்ரவரி 17 முதல் 22 ஆம் தேதி மாலை 3 மணிக்குள் மாணவர்கள் அசல் சான்றிதழை சமர்பித்து கல்லூரியில் சேர்ந்து கொள்ளலாம் என்று மருத்துவ கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.