டெல்லி: தலைநகர் டெல்லி உள்பட வடமாநிலங்களில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வரவதால், மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளையும், பாதுகாப்பு நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் பல மாநிலங்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். குறிப்பாக  அரியானா, உத்தரபிரதேசம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் மிசோரம் மாநிலங்களில் அதிகரித்து வரும் தொற்றுபரவல் குறித்தும், மாநிலங்கள் கொரோனா கண்காணிப்பை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.

கடந்த சில வாரங்களாக நாட்டில் தினசரி 1000 புதிய தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன.  அண்மையில் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.  இதனால்,  தொற்றுநோய் பரவுவதைத் தொடர்ந்து கண்காணிக்கவும், கொரோனா தடுப்பை விரைவாகவும் திறமையாகவும் நிர்வகிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. தடுப்பூசி, கட்டுப்பாடுகளை கடைபிடிப்பது, நெரிசலான பகுதிகளில் முககவசம் அணிவது உள்ளிட்டவற்றிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும்.

புதிய கொரோனா பாதிப்புகளை கண்காணிக்கவும், தொற்று பரவுவதை குறைக்க தேவையான கட்டுப்பாட்டு முயற்சிகளை மேற்கொள்ளவும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.