டில்லி
மத்திய அரசு ஒரே நாளில் ஒரு மாநிலத்தை யூனியன் பிரதேசம் ஆக்கி உள்ளதாக மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.
நேற்று மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 ஐ நீக்கும் தீர்மான மசோதாவை அளித்தார். அந்த தீர்மானம் சில மணி நேரங்களுக்குள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துள்ளார். அத்துடன் காஷ்மீர் மாநிலம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசம் ஆக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விவாதத்தில் மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “காஷ்மீர் ஒரு திறந்த வெளி சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது. காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370 மற்றும் யூனியன் பிரதேசமாக்கும் மசோதா ஆகியவை அனைத்து விதிகளையும் மீறி ஒரே நாளில் நிறைவேற்றப்பட்டுள்ளது ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு குறித்து எவ்வித விவாதமும் நடத்தப்படவில்லை.
இந்த விவகாரத்தில் அரசியலமைப்புச் சட்டத்தை உள்துறை அமைச்சர் மீறி உள்ளார். உலகெங்கும் காஷ்மீர் பிரச்சினையை அனைத்து நாடுகளும் கவனித்து வரும் சூழ்நிலையில் மத்திய அரசு இந்த விவகாரத்தை உள்நாட்டுப் பிரச்சினை எனக் கூறி உள்ளது. இது நிஜமாகவே உள்நாட்டுப் பிரச்சினையா என்பதை அரசு தெளிவு படுத்த வேண்டும்” எனக் கூறி உள்ளார்.