காராக்பூர்:

ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பி.ஹெச்டி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 70 ஆயிரம் நிதியுதவி அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மேற்குவங்க மாநிலத்தில் உள்ள காராக்பூர் ஐஐடி.யின் 67வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட மத்திய உயர்கல்வி துறை செயலாளர் கேவல் குமார் சர்மா பேசுகையில், ‘‘ஐஐடி.க்களில் பயிலும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 25 ஆயிரம் உதவித் தொகை தற்போது வழங்கப்படுகிறது. அடுத்தகட்டமாக ஐஐடி, ஐஐஎஸ்சி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பி.ஹெச்டி மேற்கொள்ளும் ஆராய்ச்சியாளர்களுக்கு மாதந்தோறும் ரூ. 70 ஆயிரம் நிதியுதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் இந்த நிதியுதவி திட்டம் மூலம் நிதி பிரச்னையால் கல்வி பயில சிறந்த மாணவர்கள் நாட்டை விட்டு வெளியே செல்வது தடுக்கப்படும். அனைத்து ஐஐடி மற்றும் பெங்களூரு ஐஐஎஸ்சி ஆகியவற்றில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும். இது 5 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்’’ என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், ‘‘ அதிக சம்பவளத்துக்கு ஆசைப்பட்டு ஆராய்ச்சியை மேற்கொள்ளாமல் கார்பரேட் நிறுவனங்களுக்கு வேலை செல்லும் மாணவர்கள் தடுக்கப்பட்டு, தங்களது இலக்கை அடைய இது உதவியாக இருக்கும்.

எனினும் உதவித் தொகை பெறும் மாணவர்கள் வேறு எந்த வேலையிலும் ஈடுபடக்கூடாது. இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை விரைவில் ஒப்புதல் அளிக்கவுள்ளது. அடுத்த அமர்வு முதல் இது அமலுக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது’’ என்றார்.