டில்லி:

மத அமைப்புகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படும் இலவச உணவு விநியோக திட்டத்திற்கு (லங்கர் உணவு) நிதியுதவி அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இலவச உணவு விநியோக திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி.யில் விலக்கு அளிக்க வேண்டும் என்று பல சீக்கிய அமைப்புகள் கோரிக்கை விடுத்திருந்தது. இதைதொடர்ந்தே நிதியுதவி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு இன்று (ஜூன் 1) முதல் அறிமுகம் செய்துள்ளது.

2018&19ம் ஆண்டு முதல் 2019&20ம் ஆண்டு வரை இந்த திட்டத்திற்கு ரூ.325 கோடியை ஒதுக்கீடு செய்து மத்திய கலாச்சார துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இலவச உணவு வழங்கும் திட்டத்திற்கு கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி.யில் மத்திய அரசின் பங்கு தொகை நிதியுதவியாக மதம் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கு திருப்பி கொடுக்கப்படும்.

அமிர்தசரஸ் மற்றும் இதர குருத்வாராக்களில் விநியோகம் செய்யப்படும் இலவச உணவு தயாரிக்க ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான டன் கோதுமை மாவு, நெய், மசாலா பொருட்கள், காய்கறி, பால், சர்க்கரை, அரிசி போன்றவை பயன்படுத்தப்படுகிறது. லட்சகணக்கான லிட்டர் தண்ணீரும் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.