டெல்லி: பெகாசஸ், விவசாய சட்டங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க தயார் என ஜார்கண்ட் மாநில பாஜக எம்.பி.  தீபக் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

டெலிபோன் ஒட்டுக்கேட்பு தொடர்பான பெகாசஸ் விவகாரம் எதிர்க்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனால் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர், எம்.பி.க்களின் அமளியால் முடங்கியுள்ளது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலங்களவை பாஜக எம்பியும், ஜார்க்கண்ட் மாநில பாஜக தலைவருமான தீபக் பிரகாஷ் கூறியதாவது.

விவசாய சட்டங்கள், பெகாசஸ் விவகாரம் குறித்து. எதிர்க்கட்சிகளுக்கு நாடாளுமன்றத்தில் விவாதிக்க விருப்பம் இல்லை. பெகாசஸ் விவகாரத்தில் வேவு பார்ப்பது என எதுவும் இல்லை, அரசுக்கும் அதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் வெறுமனே வம்பு செய்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தொடர்ந்து எதிர்மறையான அரசியலைச் செய்கின்றன. இது ஜனநாயக அமைப்பை அவர்கள் நம்பவில்லை என்பதை காட்டுகிறது. இது மிகவும் வருத்தமாக உள்ளது.

அதுபோல விவசாய சட்டங்கள் முற்றிலும் விவசாயிகளின் நலனுக்காக கொண்டுவரப்பட்டுள்ளன. இந்தப் பிரச்சினைகள் அனைத்தும் விவாதிக்கப்பட்டால், எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் முழுமையாக அம்பலப்படுத்தப்படும் என்றும்,  சாதிவாரி கணக்கெடுப்பிலும் அரசு பின்வாங்கவில்லை என்றும் தெரிவித்தார்.