டெல்லி: கொரோனாவுக்கான கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகையே பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி உள்ள கொரோனா வைரசுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் இறங்கி உள்ளன. அவற்றில் ஒன்றாக, அஸ்ட்ராசென்கா, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இணைந்து கொரோனா தடுப்பூசியை தயாரித்து உள்ளன. கோவிஷீல்டு என்று இந்த தடுப்பூசிக்கு பெயரிடப்பட்டு உள்ளது.
இந் நிலையில் கோவிஷீல்டு தடுப்பூசியை 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்கு கொண்டு வர விண்ணப்பிக்க உள்ளதாக சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அதன் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனவல்லா கூறி இருப்பதாவது:
தடுப்பூசியை இன்னும் 2 வாரங்களில் அவசரகால பயன்பாட்டுக்காக கொண்டு வரும் வகையில் அதற்கு விண்ணப்பிக்கும் நடவடிக்கைகளில் இறங்கி உள்ளோம். தற்போதுள்ள நிலையின்படி, அரசுடன் எந்த எழுத்துப்பூர்வமான ஒப்பந்தத்தை நாங்கள் மேற்கொள்ளவில்லை. ஆனாலும், அடுத்தாண்டு ஜூலைக்குள் 30 முதல் 40 கோடி தடுப்பூசிகளை இந்தியா கொள்முதல் செய்யும் என்று எதிர்பார்க்கிறோம் என்று கூறினார்.
முன்னதாக, மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட்டில் பிரதமர் மோடி சென்று பார்வையிட்டார். கோவிஷீல்டு தடுப்பூசியின் விவரங்கள், முன்னேற்றங்கள் குறித்து அவர் கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.