டெல்லி: நாடு முழுவதும் உள்ள அணைகளை பாதுகாக்க தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு அமைத்துள்ளது. மத்திய நீர் ஆணையத்தின் தலைவர் தலைமையில் அணை பாதுகாப்புக்கான 22 உறுப்பினர்களைக் கொண்ட தேசியக் குழுவையும் மையம் அமைத்துள்ளது.
நாடு முழுவதும் மாநிலங்களுக்கு தண்ணீர் பங்கீடு பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டுடன் கர்நாடகா, கேரள மாநிலங்களில் தகராறு செய்து வருகின்றன. தமிழ்நாட்டுக்கு தண்ணீரை வழங்கும் முல்லை பெரியாறு அணையை கேரள இடிக்க முயற்சித்து வருகிறது. இதுபோன்ற பிரச்சினைகளை ஆய்வு செய்து தீர்வு காணும் வகையில், தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தை மத்தியஅரசு அமைத்துள்ளது.
இந்த ஆணையத்துக்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த சட்டம் கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது, மாநிலங்களின் உரிமையை பறிக்கிறது; இது ஜனநாயகத்துக்கு ஆபத்தானது என்று குற்றம் சாட்டுகிறது.
ஆனால், மத்திய அரசு கண்டுகொள்ளாமல், கடந்த ஆண்டு (2021) டிசம்பர் 8-ந் தேதி நாடாளுமன்றத்தில் அணைகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்து நிறை வேற்றியது. இந்த சட்டத்தின்படி, நாட்டில் உள்ள அணைகளை ஒரே சீராக பாதுகாக்க ஏற்ற வகையில் ஒரே மாதிரியான வழிமுறைகளை உருவாக்கும் நோக்கத்தோடு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம், மாநில அளவிலான அணை பாதுகாப்பு அமைப்புகளுடனும், அதன் உரிமையாளர்களுடனும் பாதுகாப்பு தொடர்பான தரவுகள் மற்றும் நடைமுறைகளை தர நிலைப்படுத்துவதற்காக தொடர்பு கொள்ளும் என்று கூறுகிறது.
இந்த சட்டத்தின்கீழ் இப்போது தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை ஏற்படுத்தி, அது தொடர்பான அரசிதழ் அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில், “அணைகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் தேசிய ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை நிறைவேற்றுவதற்காக தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தை மத்திய அரசு ஏற்படுத்துகிறது. இந்த ஆணையம் 2022 பிப்ரவரி 18-ந் தேதி (நேற்று) நடைமுறைக்கு வந்துள்ளது” என கூறப்பட்டுள்ளது.
இந்த ஆணையத்துக்கு தலைவர் தலைமையில் அணை பாதுகாப்புக்கான 22 உறுப்பினர்களை கொண்ட தேசியக்குழுவையும் மத்திய அரசு அமைத்துள்ளது. மாநில அணை பாதுகாப்பு அமைப்புகளுக்கு இடையேயான அல்லது மாநில அணை பாதுகாப்பு அமைப்புக்கும், அந்த மாநிலத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட அணையின் உரிமையாளர்களுக்கும் இடையே ஒரு பிரச்சினை என்னும்போது அதைத் தீர்ப்பதுதான் ஆணையத்தின் முக்கிய செயல்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் அதிக எண்ணிக்கையிலான அணைகள் உள்ளது. தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 5,264 அணைகள் உள்ளன. தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு மேலும், 437 அணைகள் கட்டப்படுகிறது குறிப்பிடத்தக்கது.