டெல்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் டிசம்பர் 1ந்தேதிக்குள் திறக்கப்பட வேண்டும் என மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது.
கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்வி நிறுவனங்கள் கடந்த 8 மாதங்களாக முடங்கி உள்ளன. தற்போது மத்தியஅரசு அறிவித்துள்ள கொரோனா பொதுமுடக்க தளர்வுகள் காரணமாக, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள மருத்துவக்கல்லூரிகள் அனைத்தும் டிசம்பர் 1ந்தேதிக்குள் திறக்க மருத்துவக் கல்லூரிகளைத் திறக்க மத்திய உள்துறை அமைச்சகமும் ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரைப்படி மத்திய சுகாதாரத் துறை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், கல்லூரி நிர்வாக அதிகாரிகளுக்கும் கடிதம் அனுப்பி உள்ளது.
அந்த கடிதத்தில், ”அனைத்துக் கல்லூரிகளிலும் பெருந்தொற்று பரவுவதைத் தடுக்கும் வகையில் உரிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து, மருத்துவக் கல்லூரிகளை மீண்டும் டிசம்பர் 1 அல்லது அதற்கு முன்பாகத் திறக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.
எம்பிபிஎஸ் படித்துக் கொண்டிருக்கும் முந்தைய ஆண்டு மாணவர்களுக்கு டிசம்பர் 1 அல்லது அதற்கு முன்பாகக் கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும்.
2020- 21 ஆம் ஆண்டுக்கான முதலாமாண்டு வகுப்புகள் 2021 பிப்ரவரி 1 ம் தேதியில் இருந்து தொடங்கப்பட வேண்டும்.
முதலாமாண்டு முதுகலை வகுப்புகள் அதிகபட்சம் 2021 ஜூலை 1 ஆம் தேதிக்குள்ளாகத் தொடங்க வேண்டும்.
அதேபோல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பயிற்சிக்காக கோவிட் அல்லாத படுக்கைகளைப் போதிய அளவில் தயாராக வைத்திருக்க வேண்டும்.
கோவிட் அல்லாத நோயாளிகளுக்காகப் புற நோயாளிகள் பிரிவு மற்றும் உள் நோயாளிகள் பிரிவுக்கான வசதிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்’
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.