டெல்லி
இனி பிராவிடண்ட் ஃபண்ட் ஓய்வூதியம் பெறுவோர் எந்த ஒரு வங்கியில் இருந்தும் பெறலாம் என அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎப்ஓ) அமைப்பின்மூலம் செயல்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறுவோர், இனி நாடு முழுவதும் உள்ள எந்த வங்கியில் இருந்தும், அல்லது வங்கி கிளையிலிருந்தும் ஓய்வூதியம் பெற முடியும் என அறிவித்துள்ளது. .இந்த முறை’க்கு மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ஒப்புதல் அளித்துள்ளார்.
மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா இது குறித்து,
“மையப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பட்டுவாடா முறைக்கு ஒப்புதல் அளித்திருப்பது, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் நவீனமயமாக்கலில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல் ஆகும். ஓய்வூதியம் பெறுவோர், நாட்டின் எந்த இடத்திலும் உள்ள எந்தவொரு வங்கியிலிருந்தும், எந்தவொரு கிளையிலிருந்தும் தங்கள் ஓய்வூதியத்தைப் பெற வழிவகுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, ஓய்வூதியதாரர்கள் எதிர்கொள்ளும் நீண்டகால சிக்கல்களுக்கு தீர்வு காண்பதுடன், தடையற்ற மற்றும் திறமையான பட்டுவாடா வழிமுறையை உறுதி செய்கிறது”
என்று கூறியுள்ளார்.
இதன்மூலம் 78 லட்சத்திற்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேம்பட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் வங்கி தொழில் நுட்பங்களை பயன்படுத்துவதன் மூலம், ஓய்வூதியம் பெறுவதும் எளிமையாக இருக்கும். மேலும் ஓய்வூதியம் பெறுபவர் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றாலோ, அவரது வங்கி அல்லது கிளையை மாற்றினாலும்கூட, ஓய்வூதிய பட்டுவாடா ஆணைகளை ஒரு அலுவலகத்திலிருந்து மற்றொன்றுக்கு மாற்ற வேண்டிய அவசியமில்லை.
சொந்த ஊருக்கு பணி ஓய்வுக்குப் பிறகுச் செல்லும் ஓய்வூதியதாரர்களுக்கு இது பெரும் நிவாரணமாக இருக்கும். அடுத்த ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படும் இந்த புதிய பட்டுவாடா முறைஅடுத்த கட்டமாக, ஆதார் அடிப்படையிலான பட்டுவாடா தொடர்பான மாற்றத்தை சுமுகமாக செயல்படுத்தும் என்று தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.