தேனி: முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் அறிவுறுத்திலின்படி, மத்திய நீர்வள ஆதார தலைமைப் பொறியாளர் தலைமை யிலான கண்காணிப்புக் குழுவினர் முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
முல்லைப் பெரியாறு அணையின் தண்ணீர் தேக்குவது தொடர்பாக கேரள அரசு தொடர்ந்த வழக்கில், அணையின் உறுதித்தன்மையை ஆய்வு செய்ய உத்தரவிட்ட உச்சநீதி மன்றம் 3 பேர் கொண்ட மத்திய தலைமை கண்காணிப்புக்குழு மற்றும் 5 பேர் கொண்ட துணைக்குழுவை நியமித்தது. இந்த குழுவினர், முல்லைப் பெரியாறு அணை, பேபி அணை, சுரங்கப்பகுதிகளிள், மற்றும் அணையில் உள்ள 13 மதகுகளை இயக்கியும் ஆய்வுகள் நடத்தவும், மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், அறிக்கை சமர்ப்பிக்கும்படி கூறியது.
அதன்படி, இன்று (வெள்ளிக்கிழமை) மத்திய தலைமை கண்காணிப்புக் குழுத்தலைவரும், மத்திய நீர்வள ஆதார தலைமைப் பொறியாளருமான குல்சன்ராஜ் தலைமையில், தமிழக அரசு சார்பில் காவிரியாறு தொழில் நுட்பக் குழுத்தலைவர் சுப்பிரமணியன், கேரள அரசு சார்பில் மாநில நீர்ப்பாசனத்துறை செயலாளர் பிரணாப் ஜோதிநாத் ஆகியோர் அணையில் ஆய்வுகள் நடத்தினர்.
இவர்களுடன் தமிழகஅரசு சார்பில், மத்திய கண்காணிப்பு துணைக் குழுத்தலைவர் சரவணகுமார், தமிழக பிரதிநிதிகள் செயற்பொறியாளர் சாம் இர்வின், உதவிப் பொறியாளர் குமார், கேரள பிரதிநிதிகள், நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் பினுபேபி, உதவி பொறியாளர் பிரஸீத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த குழுவினர் மெயின் டேம், பேபி அணை, நீர்க்கசிவு அளக்கப்படும் கருவி, சுரங்கப்பகுதி, உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். கேரளாவுக்கு உபரி நீர் செல்லும் பாதையில் உள்ள 13 மதகுகளில், 3 மற்றும் 4 ஆவது மதகுகளை கண்காணிப்பு குழு தலைவர் குல்சன்ராஜ் தலைமையிலான குழுவினர் இயக்கி பார்த்தனர். பின்னர் தேக்கடி ஆனவாச்சலில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் மத்திய தலைமை கண்காணிப்புக் குழு கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, குழுவின் அறிக்கை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.