டெல்லி:
இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு மத்திய அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சுரேஷ் கல்மாடி, அபய்சிங் சவுதாலா ஆகியோர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் (ஐ.ஓ.ஏ.) ஆயுட் கால தலைவராக நியமனம் செய்யவதாக ஒலிம்பிக் சங்கம் அறிவித்தது. ஒலிம்பிக்க் சங்கத்தின் இந்த அறிவிப்புக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் பலத்த எதிர்ப்பு தெரிவித்தது. அவர்களை நீக்காவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்த மத்திய விளையாட்டு அமைச்சகம், விளக்கம் கேட்டும் நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் இந்திய ஒலிம்பிக் சங்கம் தங்களது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளவில்லை. இதற்கிடையே, ஒலிம்பிக் சங்க தலைவர் பொறுப்பை ஏற்க போவது இல்லை என்று சுரேஷ் கல்மாடியும் அறிவித்து இருந்தார்.

மத்திய அரசு எச்சரிக்கையை தொடர்ந்து, சுரேஷ் கல்மாடி மற்றும் சவுதாலாவுக்கு பதவி வழங்கும் முடிவை இந்திய ஒலிம்பிக் சங்கம் திரும்ப பெற்றுக்கொண்டது. ‛இவர்களுக்கு கவுரவ ஆயுட்கால தலைவர் பதவி வழங்குவது குறித்து, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின், ஆயுட்கால கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை’ என, ஒலிம்பிக் சங்க தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்தார். ஒலிம்பிக் சங்கத்தின் இந்த முடிவுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் வரவேற்பு தெரிவித்துள்ளது.