டில்லி
மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவ்த் சனாதனத்துக்கு எதிராகப் பேசினால் நாக்கை பிடுங்குவோம் எனக் கூறி உள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை தேனாம்பேட்டையில் சனாதன எதிர்ப்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்றுப் பேசுகையில் ‘சனாதன தர்மத்தை டெங்கு, மலேரியா, கொரோனா போன்ற காய்ச்சல்களைப் போல ஒழிக்க வேண்டும்’ என்று பேசினார்.
அவரது பேச்சுக்கு எதிர்ப்பும், ஆதரவும் தெரிவிக்கப்பட்டன. உத்தர பிரதேசத்தில் சாமியார் ஒருவர் பேசுகையில், உதயநிதி ஸ்டாலின் தலையைக் கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் அளிக்கப்படும் என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். பல்வேறு தரப்புகளிடம் இருந்து இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் ஷெகாவத் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில்,
“சனாதனத்திற்கு எதிராகப் பேசினால் நாக்கை பிடுங்க வேண்டும்; கண்ணை நோண்ட வேண்டும். சனாதனத்திற்கு எதிராகப் பேசும் யாரும் அரசியல் அதிகாரம் அந்தஸ்தைத் தக்கவைக்க முடியாது. நமது முன்னோர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து சனாதன தர்மத்தைப் பாதுகாத்தனர். சனாதனத்தை ஒழிப்பதாகப் பேசுபவர்களை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்”
என்று தெரிவித்துள்ளார்.