பிகானர்:

த்திய பாஜக அரசு, “டிஜிட்டல் இந்தியா” என்ற முழக்கத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வரும் நிலையில் மத்திய இணை நிதி அமைச்சர் ஒருவர் செல்போன் சிக்னல் கிடைக்காததால், மரத்தில் ஏறி போன் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய இணை நிதி அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். அங்குள்ள பிகானர் தொகுதியின் எம்.பி.யாக  தேர்ந்தெடுக்கப்பட்டவர்.

தனது சொந்தத் தொகுதியான பிகானரில் உள்ள  தோலியா கிராமத்திற்கு  மீடியாக்களுடன் நேற்று சென்றார் அமைச்சர். அந்த கிராம மக்களிடம் குறைகளை அவர் கேட்டறிந்தார். கிராம மக்கள் அங்குள்ள மருத்துவமனையில் போதிய செவிலியர்கள் இல்லை என்பது உள்பட பல்வேறு  குறைகளை தெரிவித்தனர்.

இது குறித்  தகவல்களை அறிய சுகாதார துறை அதிகாரிக்கு அழைப்பு விடுக்க போன் செய்தார் அமைச்சர்.  சிக்னல் சரியாக கிடைக்கவில்லை. நீண்ட நேரம் அங்கும், இங்குமாக நடந்து அலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சி செய்துகொண்டே இருந்தார். ஆனால் சிக்னல் கிடைக்கவில்லை.

அப்போது கிராம மக்கள், “இங்கே சிக்னல் கிடைப்பது அறிது. மரத்தில் ஏறி பேசிப்பாருங்கள். சிக்னல் கிடைக்கும்” என்று கூறினர்.

இதைக் கேட்டஅமைச்சர் ராம் மேக்வால்  சிரித்தபடியே, தன்னுடைய ஆடையை காரணம் காட்டி தன்னால் மரத்தில் ஏற முடியாது என்றார்.  உடனே ஊர் மக்கள் ஒரு ஏணியை எடுத்துவந்து அவர் மரத்தில் ஏறுவதற்கு உதவி செய்தனர்.

பிறகு மரத்தில் ஏறி அமைச்சர் போன் செய்தார். அப்போதுதான் சிக்னல் கிடைத்து அவரால் பேச முடிந்தது. ஒருவழியாக பேசிவிட்டு கீழே இறங்கிய அமைச்சர், அந்த பகுதியில் ரூ. 13 லட்சம் மதிப்பில் செல்போன் டவர் அமைக்க உத்தரவிட்டு உள்ளார்.

அமைச்சர், ஏணியில்  அமர்ந்துக்கொண்டு பேசும் வீடியோ காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டை நவீனமாக்கி வருவதாகக் கூறும் மத்திய பாஜக அரசு, டிஜிட்டல் இந்தியா என்று முழக்கம் எழுப்புகிறது.