கொல்கத்தா

கொல்கத்தாவில் மாணவர்களால் சிறை பிடிக்கப்பட்ட மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவை மேற்கு வங்க ஆளுநர் காப்பாற்றி உள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக எதிர்ப்பு மிகவும் கடுமையாக உள்ளது.   அம்மாநில தலைநகர் கொல்கத்தாவில் ஜடாவ்பூர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.   இந்த பல்கலைக்கழகத்தில் ஆர் எஸ் எஸ் மாணவர் பிரிவான ஏபிவிபி சார்பில் ஒரு கருத்தரங்கம் நேற்று நடந்தது.  இதில் மத்திய சுற்றுச் சூழல் துறை இணையமச்சரி பபுல் சுப்ரியோ கலந்துக் கொண்டார்.

அமைச்சர் பபுல் சுப்ரியோவுக்கு இந்த பல்கலைக்கழகத்தின் திருணாமுல் காங்கிரஸ் மற்றும் இடது சாரி சங்கத்தைச் சேர்ந்த மாணவர்கள் கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.  ஆயினும் விழாவில் கலந்துக் கொண்டு அமைச்சர் உரையாற்றினார்.  அப்போது அவர் மாணவர்களின் போராட்டம் வருத்தத்துக்குரியது எனத் தெரிவித்தார்.

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப்

விழா முடிந்து வெளியில் செல்ல முற்பட்ட பபுல் சுப்ரியோவை மாணவர்கள் சூழ்ந்துக் கொண்டு சிறை பிடித்தனர்.   அவரை வெளியில் செல்ல அனுமதிக்காமல் போராட்டம் நடத்தினர்.   இந்த தகவலை அறிந்த மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தாங்கர் உடனடியாக காவல்துறையுடன் வந்து அமைச்சரை மீட்டார்.   அதன்பிறகு ஆளுநரின் வாகனத்தில் அமைச்சர் வெளியேறினார்.

இதற்கு திருணாமுல் காங்கிரஸ் மற்றும் இடது சாரி மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்    ஒரு மாநிலத்தின் ஆளுநர் இவ்வாறு தனது கட்சியை சேர்ந்த அமைச்சருக்காக தானே நேரில் வந்து காப்பாற்றியது அவருடைய  ஒரு தலைப்பட்சமான மனநிலையைக் காட்டுவதாகக் குற்றம் சாட்டி உள்ளனர்.