டில்லி,
ஆதார் விவரங்களைப் பதிவு செய்வதில் முறைகேடுகள் நடைபெற்றது உண்மைதான் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டதாக 50,000 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள் என்று மத்திய அமைச்சர் அதிர்ச்சி தகவலை கூறி உள்ளார்.
நாடு முழுவதும் அனைத்துவிதமான பரிவர்த்தனைகளுக்கும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்து உள்ளது. இதையடுத்து, ஆதார் எடுக்கும் பணிகள் நாடு முழுவதும் விரைவுபடுத்தப்பட்டு நடைபெற்ற வருகிறது.
இந்நிலையில், ஆதார் தகவல்கள் அவ்வப்போது வெளியாவதாக தகவல்கள் வந்தவண்ணம் உள்ளது. தனிநபரின் பாதுகாப்பை உறுதி செய்யும் ஆதார் தகவல்கள் வெளியாகி வருவதற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆதார் விவரங்களைப் பதிவு செய்வதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக 50 ஆயிரம் ஊழியர்கள் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம் தெரிவித்து உள்ளார்.
ஏற்கனவே ஆதார் குறித்து கருத்து தெரிவித்துள்ள உச்சநிதி மன்றம், வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் மட்டுமே விவரங்களை பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று மாநிலங்களவையில் ஆதார் குறித்து விவாதம் நடைபெற்றது.
அப்போது பேசிய மத்திய இணையமைச்சர் அல்போன்ஸ் கண்ணந்தானம், ஆதார் விவரங்கள் பதிவு செய்வதில் விதிமீறல்கள் நடைபெற்றுள்ளது என்பதை ஒப்புக்கொண்டார். அதைத்தொடர்ந்து எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கை காரணமாக 50,000 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் இந்த ஒப்புதல் பேச்சு நாட்டு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.