டெல்லி

த்திய அமைச்சரவை ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பிரதமர் மோடி நாடு முழுவதும் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதில் உறுதியாக உள்ளார். அவர் வெவ்வேறு நேரங்களில் தேர்தல் நடப்பதால், வளர்ச்சி பணிகள் பாதிக்கப்படுவதாகவும், தேர்தல் செலவு அதிகரிப்பதாகவும் கருதுகிறார்.

எனவே மத்திய அரசு ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்டக் குழுவை அமைத்தது.

இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை அமைச்சரவை ஏற்றுக்கொண்டதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். அதாவது ராம்நாத் கோவிந்த் குழுவின் பரிந்துரைகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது மசோதாவாக தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் மோடி தலைமையிலான 3 ஆம் ஆட்சியின் 100 நாட்கள் நிறைவடைந்திருப்பதை கொண்டாடும் விதமாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.