டில்லி

நடந்து முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்களுக்காக பெட்ரோல் விலை உயர்த்தப்படவில்லையா என்பதற்கு மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன.  சமீபத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது.  அதே வேளையில் இந்திய ரூபாய் மதிப்பு குறைந்துள்ளது.

ஆனால் சுமார் 110 நாட்களுக்கும் மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை.  இந்தியாவில் சமீபத்தில் கோவா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடந்தது.  இதனால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்படவில்லை எனப் பலரும் கருத்து தெரிவித்தனர்.

இது குறித்து மத்திய பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, “இந்தியாவில் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்படுகிறது.   தற்போது உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போர் நடப்பதால் கச்ச எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதித்துள்ளதால் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரலாம்.

இந்தியாவில் 5 மாநில சட்டப்பேரவை தேர்தலைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை கட்டுப்படுத்தியதாகக் கூறுவது தவறாகும்.  உலக சந்தையின் முடிவுகளைப் பொறுத்தே விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.    எண்ணெய் நிறுவனங்கள் இதைக் கருத்தில் கொண்டு மக்களுக்குச் சாதகமான முடிவுகளை எடுத்து வருகிறது” எனக் கூறி உள்ளார்.