புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலால், நெருக்கடியான நிலையில் நாடு இருக்கும்போது, பணிக்கு வராத அதிகாரிகள் விடுவிக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளது மத்திய அரசு .
மத்திய அமைச்சகர்கள் மற்றும் அதிகாரிகள் 13ம் தேதி முதல் பணிக்கு திரும்ப வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து மத்திய அமைச்சர்கள் அனைவரும் பணிக்கு திரும்பினர். ஆனால், அதிகாரிகளைப் பொறுத்தவரை, குறைந்தளவே பணிக்கு வந்திருந்தனர். நேற்றும் அதிகாரிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாகத்தான் இருந்தது.
இதையடுத்து, மத்திய நுகர்வோர் விவகாரத்துறை, உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சகம் சார்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது; நாடு நெருக்கடியான நிலையில் உள்ளது. இப்போது உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சகத்தின் பணி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் அதிகாரிகள் பணிக்கு வராமல் இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.
சம்பந்தப்பட்டவர்கள் தொடர்ந்து பணியாற்ற விருப்பமாக உள்ளனரா, இல்லையா? என்பதை 20ம் தேதிக்குள் அவர்கள் தெரிவிக்க வேண்டும். பணிக்கு வர விருப்பம் இல்லாத அதிகாரிகள் உடனடியாக விடுவிக்கப்படுவர். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.