ஸ்ரீநகர்
காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்கள் மெகபூபா முஃப்தி மற்றும் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் மீது மத்திய அரசு பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 நீக்கப்பட்டுச் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது. அப்போதிலிருந்து அங்கு மிகவும் பரபரப்பான சூழல் உள்ளது. காஷ்மீர் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்ட போதிலும் ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ளது. முன்னாள் முதல்வர்கள் உள்ளிட்ட பல தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
இணையம் மற்றும் மொபைல் சேவைகள் துண்டிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டது. தற்போது அங்கு அமைதி திரும்பி வருவதாக அறிவிக்கப்பட்டு கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன. ஆயினும் தலைவர்கள் காவலில் உள்ளனர். நேற்று பிரதமர் மோடி காஷ்மீர் அரசியல் தலைவர்களான உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, சர்தாஜ் மதானி போன்றோரை சுதந்திரமாக விட்டால் அவர்கள் மக்களைத் தவறான வழியில் அழைத்துச் செல்வார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, சர்தாஜ் மதானி உள்ளிட தலைவர்களை பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்த தலைவர்களின் வீட்டுக் காவலை நீட்டிக்க இந்த நடவடிக்கையை மத்திய அரசு எடுத்துள்ளது. இதனால் இவர்களை எவ்வித விசாரணையும் இன்றி ஆறு மாதம் வீட்டுக் காவலில் வைக்க முடியும்.
ஏற்கனவே பொதுப்பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உமர் அப்துல்லா கொண்டு வரப்பட்டுக் கடந்த ஜனவரி மாதம் அவர் காவல் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. தற்போது மற்ற தலைவர்களும் இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் கைதுக்கு அரசு இனி எவ்வித விளக்கமும் அளிக்க வேண்டியது இல்லை. தீவிரவாதிகள், கலகக்காரர்களின் வரிசையில் தற்போது முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
[youtube-feed feed=1]