டில்லி

ணக்கில் வராமல் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு கருப்புப் பணத்தை ஒழிக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  இதன் ஒருபகுதியாகக் கடந்த 2016ம் ஆண்டு ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவித்து பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது கருப்புப் பணம் வைத்திருந்தவர்கள் கள்ளச் சந்தைகளில் தங்கம் வாங்கி பதுக்கியதாகக் கூறப்படுகிறது.

கருப்புப் பணத்தை ஒழிக்க முன்பு எடுக்கப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கையைப் போன்று மற்றும் ஒரு அதிரடி நடவடிக்கையை  எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கணக்கில் வராமல் தனி நபர்கள் வைத்திருக்கும் தங்கத்திற்கு அதிகபட்ச அபராத வரியை வசூலிக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.   இவ்வாறு கணக்கில்லாமல் தங்கம் வைத்திருக்கும் தனி நபர்கள் தாங்களே முன்வந்து ஒப்படைத்தால் அவர்களுக்குக் குறைந்தபட்ச அபராத வரி விதிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் தங்கம் வைத்திருப்பதற்கு ஒரு வரம்பு திட்டத்தைக் கொண்டு வரவும் கணக்கில் வராத தங்கத்தை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறி வைத்திருப்பவர்களுக்குக் கடுமையான அபராதம் விதிக்கவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில் திருமணமான பெண்களின் தங்க நகைகள், ஒரு குறிப்பிட்ட தொகைக்குக் கீழே இருந்தால் அவற்றுக்கு இந்த திட்டத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிய வந்துள்ளது.