டில்லி
இந்தியக் குற்றவியல் சட்டங்களை மாற்ற மத்திய அரசு ஆலோசிப்பதாக மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தற்போது டில்லியில் நாடாளுமன்ற குளிர் காலத் தொடர் நடந்து வருகிறது. இதில் மக்களவை உறுப்பினர் ஒருவர் இந்தியக் குற்றவியல் சட்டங்களை மாற்றுவது குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் அந்த பதிலில்,
“மத்திய அரசு இந்தியத் தண்டனை சட்டம் 1860, குற்றவியல் தண்டனை சட்டம் 1973, இந்தியச் சாட்சிய சட்டம் 1872 ஆகியவற்றில் மக்களுக்கு விரைவில் நீதி கிடைக்கும் வகையிலான திருத்தங்களைக் கொண்டு வர சம்பந்தப்பட்ட அமைச்சகம், துறைகளின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது.
உள்துறை விவகாரத்துக்கான நாடாளுமன்ற குழுவின் 111 மற்றும் 128வது அறிக்கைகளில் இது குறித்து பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவற்றில், பெயரளவிலான திருத்தங்களாக அல்லாமல், தேவையான திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டது. தற்போதைய 146வது அறிக்கையில், மக்கள் நலன் சார்ந்த, விரைவில் நீதி கிடைக்கும் வகையிலான திருத்தங்களை மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. விரைவில் இவை நிறைவேற்றப்படும்”
என அறிவித்துள்ளார்.