டில்லி
மத்திய ராணுவ மற்றும் காவல்துறை கேண்டின்களில் ஜூன் 1 முதல் வெளி நாட்டுப்பொருட்கள் விற்க மத்திய அரசு விதித்த தடை உத்தரவு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கீழ் 1700 மத்திய காவல்துறை, மற்றும் ராணுவ கேண்டீன்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு ராணுவம், மத்திய ஆயுத காவல்துறை, மத்திய காவல்துறை ஆகிய பிரிவில் பணியாற்றும் சுமார் 50 லட்சம் குடும்பத்தினர் பொருட்களை வாங்குகின்றனர் இங்கு வெளி நாட்டுப் பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வந்தன.
இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட உத்தரவில், “ஜூன் 1 முதல் கேண்டீன்கள் உள்நாட்டில் தயாரிக்கும் பொருட்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டும். மற்ற பொருட்களை விற்கக்கூடாது.
வெளிநாட்டில் இறக்கு மதி செய்யப்பட்ட பொருட்கள் மூலம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்கலாம். முழுமையாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை விற்பனை செயக் கூடாது.” என அறிவிக்கப்பட்டது. இந்த பட்டியலில் 1026 பொருட்கள் பட்டியல் இடப்பட்டிருந்தன.
இன்று ஜூன் 1 என்பதால் இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்தது. ஆனால் சில மn நேரத்துக்குள் இந்த உத்தரவை மத்திய உள்துறை அமைச்சகம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து திருத்தப்பட்ட மறு உத்தரவு விரைவில் வெளியிடப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.