டில்லி

ரசுத் துறைகள் ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய பாக்கிகளை உடனடியாக அளிக்க மத்திய நிதி அமைச்சகம் உத்தரவு இட்டுள்ளது.

அரசு விமானச்சேவை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா கடன் சுமை காரணமாக தற்போது டாடா குழுமத்துக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.   அரசு நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளுக்கு விமான டிக்கட் கடன் முறையில் ஏர் இந்தியா அளித்து வந்தது.   அதிகாரிகள் விடுமுறை சுற்றுலா சலுகையையும் ஏர் இந்தியா மூலமே அனுபவித்து வந்தனர்.  இதனால் ஏர் இந்தியாவுக்குப் பாக்கி தொகை செலுத்த வேண்டி உள்ளது.

நேற்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்பு அரசு அதிகாரிகள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணங்களை ஏர் இந்தியா மூலம் மட்டுமே செல்ல வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.  மேலும் விடுமுறை சுற்றுலா சலுகையும் ஏர் இந்தியா மூலம் சென்றால் மட்டுமே அரசு ஏற்றுக் கொள்ளும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் இந்திய அரசு இனி ஏர் இந்தியாவில் எவ்வித முதலீடும் செய்ய வேண்டாம் என முடிவு எடுத்துள்ளது.  அதற்கான நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. ஏர் இந்தியாவும் டிக்கட் கடன் முறையில் அளிப்பதை நிறுத்தி விட்டது. எனவே அனைத்து அமைச்சகம் மற்றும் துறைகள் உடனடியாக ஏர் இந்தியாவுக்குச் செலுத்த வேண்டிய பாக்கிகளைச் செலுத்த வேண்டும்.  அடுத்த அறிவிப்பு வரும் வரை ரொக்கத் தொகை செலுத்தி டிக்கட் வாங்க வேண்டும்.

இது குறித்து அனைத்து அமைச்சகம் மற்றும் துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தி அவர்கள் ஏர் இந்தியா நிறுவனத்துக்குப் பாக்கி வைத்துள்ள தொகையையும் உடனடியாக செலுத்த தேவையான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும்” என உத்தரவிடப்பட்டுள்ளது.