டெல்லி
வங்கதேசத்தில் உள்ள இந்திய தூதரக ஊழியர்களை உடனடியாக நாடு திரும்ப மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 % இடஒதுக்கீடு வழங்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றவா்கள் பெருமளவில் கைது செய்யப்பட்டு அவா்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், பலா் மாயமாக்கப்பட்டு கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
எனவே இதைக் கண்டித்து பிரதமராக பதவி வகித்த ஷேக் ஹசீனா மற்றும் அவரின் அரசுக்கு எதிராக ‘மாணவா் பாகுபாடு எதிா்ப்பு இயக்கம்’ என்ற பெயரில் மாணவா்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனா். வங்கதேசத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், வன்முறை மூண்டது.
திங்கள்கிழமை டாக்கா உள்பட நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மோதலில் 109 போ் உயிரிழந்தனா். போராட்டம் தீவிரமடைந்த கடந்த 16-ஆம் தேதியிலிருந்து திங்கள்கிழமை வரையிலான 21 நாள்களில் போராட்டம் காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 440-ஆக உயா்ந்துள்ளது என்று ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வங்கதேசத்தில் சட்டம்-ஒழுங்கு மீட்டெடுக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா மிகுந்த அக்கறை கொண்டுள்ளதாகவும் அந்நாட்டில் சுமாா் 19,000 இந்தியா்கள் உள்ளதாகவும், இவா்களில் 9,000 போ் மாணவா்கள் எனவும் இவர்களில் பெரும் பகுதியினா் கடந்த ஜூலையிலேயே தாயகம் திரும்பிவிட்டனா் என்று மத்திய அரசு தெரிவித்தது.
தற்போது வங்களதேச தலைநகரம் டாக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் முதன்மை அதிகாரிகளைத் தவிர மற்ற அதிகாரிகள், ஊழியர்கள், அவர்களின் குடும்பங்கள இந்தியா அழைக்கப்பட்டுள்ளனர். ஆனால் வங்கதேசத்தில் இந்திய தூதரகம் தொடர்ந்து இயங்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.