டில்லி

பாராளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் அமைப்பது குறித்து மத்திய அரசு தீவிர பரிசீலனை செய்து வருவதாக மத்திய வீட்டு வசதித் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 19 ஆம் தேதி அன்று டில்லியில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான  இரண்டடுக்கு வீடுகளைப் பிரதமர் மோடி திறந்து வைத்தார்.    அந்த விழாவில் பிரதமர் மோடி, “வரும் 2022 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைய உள்ளது.  அதையொட்டி வரும் 2022 ஆம் ஆண்டுக்குள் புதிய பாராளுமன்ற கட்டிடம் கட்டப்பட உள்ளது.   மத்திய அரசு இதற்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது” எனத் தன் உரையில் குறிப்பிட்டர்.

நேற்று டில்லியில் மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற முன்னேற்றத் துறை  அமைச்சர் ஹர்தீப் சிங், “ மத்திய தலைமைச் செயலகம், புதிய பாராளுமன்றம் கட்டுவது தொடர்பான திட்டங்கள் குறித்து ஆலோசிக்க மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.   இந்த புதிய கட்டிட வடிவமைப்பு குறித்த படங்களைக் கட்டுமான நிறுவனங்கள் அளிக்க உள்ளன.

இந்தியாவை கிட்டத்தட்ட 190 ஆண்டுகள் ஆங்கிலேயர் ஆட்சி செய்து வந்தனர்.  அந்த சமயத்தில் அவர்களிடம் இருந்த சிறந்த கட்டிடக்கலை வல்லுநர்களைக் கொண்டு பாராளுமன்றக் கட்டிடம் கட்டப்பட்டது.    தற்போது இந்த கட்டிடம் பழமையானபடியால்  புதிய கட்டிடம் கட்ட மத்திய அரசு தீவிரமாகப் பரிசீலனை செய்து வருகிறது.    கட்டுமான நிறுவனங்களின் வடிவமைப்பு படங்களின் அடிப்படையில் முடிவு எடுக்கப்படும்.

இந்த கட்டிடம் அமைத்த பிறகு தற்போதைய கட்டிடத்தின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகள் அருங்காட்சியகமாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.   புதிய கட்டிடத்தில் மத்திய  அமைச்சர்கள் உள்ளிட்டோரின் அலுவலகங்களும் அமைக்கப்பட உள்ளது.    இரு அவைகளிலும் அதிக அளவில் உறுப்பினர்கள் அமரும் வகையில் மாற்றி அமைக்கப்பட உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.