மும்பை

விமான நிலையங்களில் சரியான சோதனை நடத்த மத்திய அரசு உத்தரவிடாததால் மகாராஷ்டிராவில் கொரோனா பரவியதாக முதல்வர் உத்தவ் தாக்கரே கூறி உள்ளார்.

இந்தியாவில் இதுவரை 1.60 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அதில் 4568 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  இதில் மகாராஷ்டிர மாநிலம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது.   இங்குக் கிட்டத்தட்ட 57 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 1900 பேர் உயிர் இழந்துள்ளனர்.  மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே ஒரு மராத்தி தினசரிக்குக் காணொளி மூலம் பேட்டி அளிக்கையில் இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

உத்தவ் தாகக்ரே, “மகாராஷ்டிராவில் முதல் கொரோனா நோயாளி துபாயில் இருந்து வந்தவர் ஆவார்.   அப்போது ஜுரம் உள்ளதா என்பது மட்டுமே விமான நிலையத்தில் சோதனை செய்யப்பட்டது.   ஜுரம் வந்தவர் அனைவரும் முன்னெச்சரிககையாக மருந்து சாப்பிடுவது வழக்கமாகும்.  எனவே அவர் சோதனையின் போது கண்டுபிடிக்கப்படாமல் வெளியே வந்து கொரோனாவை பரப்பி உள்ளார்.

மேலும் ஆரம்பத்தில் மத்திய அரசு அளித்த பரிசோதனை செய்யப்பட வேண்டிய சர்வதேச பயணிகள் பட்டியலில் அமெரிக்கா மற்றும் துபாயில் இருந்து வந்தோரை சேர்க்கவில்லை.   ஆகவே மாநில அரசு அவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் முன்பே அவர்கள் பல மக்களுடன் கலந்து விட்டனர்.

ஊரடங்கு நேரத்தில் புலம்பெயர் தொழிலாளர்களைத் திரும்ப அனுப்பும் முடிவு சரியானது இல்லை.  அவர்களை ஊரடங்கு அறிவிக்கும் முன்பே சொந்த ஊருக்குச் செல்ல அனுமதித்திருந்தால் இத்தனை துயரம் நேர்ந்திருக்காது.

தற்போது கொரோனா சமூக பரவலை நெருங்கி விட்டது.  இதை மறைத்துப் பொய் சொல்வதில் அர்த்தமில்லை.  தற்போது மழைக் காலம் நெருங்கி வருவதால் அதையும் சேர்ந்து சமாளிக்க வேண்டியது மிகவும் கடினமான ஒன்றாகும். நான் இதில் முன்னெச்சரிக்கை இன்றி நடந்து எந்த ஒரு தவறான விளைவையும் ஏற்படுத்த விரும்பவில்லை.

என்னைப் பற்றி பாஜகவினர் கடுமையான விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர்.  இதனால் நான் வயிற்றெரிச்சல் என்பதும் கொரோனாவின் ஒரு அறிகுறியா எனச் சோதனை செய்ய உள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.