டில்லி
மத்திய அரசு தற்போது ஜிஎஸ்டி நிலுவைத் தொகையை வழங்க இயலாத நிலையில் உள்ளதாகப் பாராளுமன்ற நிதி நிலைக்குழு கூட்டத்தில் நிதிச் செயலர் அஜய் பூஷன் பாண்டே தெரிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் இந்தியா முழுவதும் மார்ச் 25 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சரிவில் இருந்த பொருளாதாரம் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இதையொட்டி பாராளுமன்ற நிதிநிலைக் குழுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த் சின்ஹா தலைமை தாங்கினார். இதில் கலந்துக் கொண்ட உறுப்பினர்களில் சிலர் கொரோனா தாக்கத்தால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார இழப்பு குறித்து கேள்விகள் எழுப்பினர்.
இதற்குப் பதில் அளித்த மத்திய நிதிச் செயலர் அஜய் பூஷன் பாண்டே, “ஊரடங்கு காரணமாக வர்த்தகம் முழுவதுமாக முடங்கி உள்ளது. இதனால் தற்போது அரசுக்கு ஜிஎஸ்டி வருமானம் மிகவும் குறைந்து வருகிறது. இதைச் சமாளிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்க இயலாத நிலையில் மத்திய அரசு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.