டில்லி
பொது மக்கள் தங்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் இலவச மருத்துவ ஆலோசனை பெறும் வசதியை மத்திய சுகாதார அமைச்சகம் தொடங்கி உள்ளது.
தற்போது கொரோனா பரவி வருவதால் பல சிறிய மருத்துவமனைகள் மூடப்பட்டுள்ளன. சாதாரண உடல்நலக் கோளாறுகளுக்கு மருத்துவ ஆலோசனை பெற முடியாத நிலையில் பொது மக்கள் உள்ளனர். இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சகம் ஆன்லைன் மூலம் வீட்டில் இருந்தபடியே மருத்துவ ஆலோசனை பெறும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
இதற்கு கேமரா மற்றும் மைக் பொருத்தப்பட்டுள்ள மடிக்கணினி அல்லது கணினி அல்லது கைபேசி தேவைப்படும். இந்த சேவை www.esanjeevaniopd.in என்னும் வலைத் தளம் வாயிலாக வழங்கப்படுகிறது. இந்த வலைத் தளத்தின் மூலம் அனைத்து நாட்களிலும் மக்கள் காலை 10 மணி முதல் பகல் 3 மணி வரை மருத்துவ ஆலோசனைகளைப் பெறலாம்.
இதைப் புதிதாகப் பயன்படுத்துபவர்கள் இசஞ்ஜீவனி ஓபிடி வலைத்தளத்தில், தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதற்கு https://www.esanjeevaniopd.in வலைத்தளத்துக்கு சென்று, நோயாளியின் பதிவு பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு கைப்பேசி எண்ணை தெரிவித்து, ஒரு தடவை கடவுச்சொல்லுக்கு கிளிக் செய்ய வேண்டும். கைப்பேசிக்கு ஒரு தடவை கடவுச்சொல் குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.
அதைப் பயன்படுத்தி, நோயாளி பற்றிய தகவல்களைப் பூர்த்தி செய்து, டோக்கன் பக்கத்தை உருவாக்க வேண்டும். நோயாளிகளின் எக்ஸ்ரே, சோதனைக்கூட ஆய்வு முடிவுகள் உள்ளிட்டவற்றை ஜேபிஇஜி அல்லது பிடிஎப் வடிவில் படிவங்களை இணைக்க வேண்டும். இந்த பூர்த்தி செய்யும் நடைமுறைகள் முடிந்த பின்னர், நோயாளியின் ஐடி டயலாக் பாக்ஸ் மற்றும் டோக்கன் பொத்தானைப் பெற கிளிக் செய்ய வேண்டும். நோயாளிகளின் கைப்பேசிக்கு ஐடி, டோக்கன் ஆகியவை குறுந்தகவல் மூலம் அனுப்பப்படும். அத்துடன், நோயாளியின் முறை நெருங்கும் போது, குறுந்தகவல் மூலம் தெரிவிக்கப்படும்.
மீண்டும் நோயாளியின் ஐடியை லாகின் செய்த பின்னர், அவர் மெய்நிகர் ஆலோசனை அறையில், வரிசையில் சேர்க்கப்படுவார். அந்த வரிசையில் கால் நவ் பொத்தான் இயங்கத்தொடங்கியதும், அதை அழுத்த வேண்டும். அவ்வாறு பொத்தானை அழுத்திய பத்து வினாடிகளில் மருத்துவரின் முகம் திரையில் தோன்றும். இவ்வாறு ஆலோசனை தொடங்கி, முடிவில் மருத்துவர் மின்னணு மருந்துச்சீட்டை தருவார். அதைப் பதிவிறக்கம் செய்து, அருகில் உள்ள மருந்தகங்களில் அவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.