டில்லி
ரூ. 2000 நோட்டுக்களை படிப்படியாகத் திரும்பப் பெறப்படுமா என்னும் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் பதில் அளித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கை நேரத்தில் ரூ. 1000 மற்றும் ரூ.500 ஆகிய நோட்டுக்கள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டது ரூ.500 நோட்டுக்கள் புதிய வடிவில் வெளியிடப்பட்டன. ரூ,1000 நோட்டுக்கள் நிறுத்தப்பட்டு அதற்குப் பதில் ரூ.2000 நோட்டுக்கள் அறிமுகம் செய்யப்பட்டன. கடந்த சில நாட்களாக ரூ.2000 நோட்டுக்கள் தட்டுப்பாடு உள்ளது.
இந்த ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்படலாம் எனச் செய்திகள் வந்தன. இதையொட்டி அரசிடம் இந்த ரூ.2000 நோட்டுக்களை படிப்படியாக திரும்பப் பெறத் திட்டம் ஏதும் உள்ளதா என மக்களவையில் கேட்கப்பட்டது. இதற்கு மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்குர் எழுத்துப் பூர்வ பதில் அளித்துள்ளார்.
அனுராக் தாக்குர், “தற்போது ரூ.2000 நோட்டுக்களைப் புழக்கத்தில் இருந்து நீக்க அரசிடம் திடம் கிடையாது. இந்த நோட்டுக்களுக்குச் சில்லறை பெறுவதில் சிரமம் உள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். அதையொட்டி ஏடிஎம் இயந்திரங்களில் ரூ.200 மற்றும் ரூ.500 அதிக அளவில் வைக்க வங்கிகள் தீர்மானித்துள்ளன. அதே வேளையில் ரூ.2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட மாட்டாது” என உறுதி அளித்துள்ளார்.