டில்லி
மத்திய அரசுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் வரியால் ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் அடிப்படையில் தினசரி பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றி அமைக்கப்படுகிறது. மத்திய மாநில அரசுகளின் வரி விதிப்பால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மிகவும் உயர்ந்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
தற்போது நாடாளுமன்ற குளிர்காலத் தொடர் கூட்டம் நடந்து வருகிறது. இந்த கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பெட்ரோல் மற்றும் டீசல் வரி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்விக்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எழுத்துப் பூர்வமாகப் பதில் அளித்துள்ளார்.
நிர்மலா சீதாராமன் தனது பதிலில், “பெட்ரோல் மீதான கலால் வரி கடந்த 20118 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் லிட்டருக்கு ரு.18.48 ஆக இருந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு நவம்பர் 4 ஆம் தேதி அன்று ரூ.27.90 ஆக அதிகரிக்கப்பட்டது. இதே நேரத்தில் டிசல் மீதான கலால் வரி ரூ.15.33லிருந்து ரூ.21.80 ஆக அதிகரிக்கப்பட்டது.
இந்த வரி உயர்வால் மத்திய அரசுக்குக் கடந்த 2020-21 நிதி ஆண்டில் ரூ.3.71 லட்சம் கோடிக்கு மேல் வருமானம் கிடைத்தது. கடந்த 3 ஆண்டுகளில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியால் மத்திய அரசுக்கு ரூ.8 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.