டில்லி

த்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ரிலையன்ஸ் உள்ளிட்ட 7 புதிய நிறுவனங்களுக்கு  பெட்ரோல் விற்பனை செய்ய அங்கீகரித்துள்ளது.

நாட்டில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு எரிபொருள் விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.   தற்போது மேலும் 7 தனியார் நிறுவனங்களுக்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அவற்றில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் நிறுவனமும் ஒன்றாகும்.   இது குறித்த விவரம் வருமாறு:

கடந்த 2019 ஆம் வருடம் இந்திய பெட்ரோலிய சில்லறை விற்பனையை விரிவு படுத்த சில புதிய நிறுவனங்களுக்கு அங்கீகாரம் அளிக்கலாம் என நெறிமுறைகள் அளிக்கப்பட்டன.  புதிய வழிமுறைகளின்படி இந்த நிறுவனங்கள் அனைத்தும் குறைந்தது ரூ.250 கோடி அளவுக்கு மதிப்புள்ளதாக இருத்தல் வேண்டும் எனவும் மொத்த விற்பனை அளவு ரூ.500 கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்பது விதியாகும்.  

இதன் அடிப்படையில் ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு புதிய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.   ஏற்கனவே உள்ள ரிலையன்ஸ் சில்லறை வர்த்தக அங்கீகாரம் தற்போது மொத்த விற்பனை அங்கீகாரமாக மாற்றப்பட்டுள்ளது.    அதாவது ஏற்கனவே பெட்ரோலிய ரசாயனக்கள் விற்பனை செய்ய முகேஷ் அம்பானி குழுமத்துக்கு அளித்துள்ள அங்கீகாரத்தில் மேலும் ஒன்றாக இதுவும் சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இண்டியன் மொலசஸ் நிறுவனம் ஏற்கனவே எண்ணெய் மையங்களை நிர்வகித்து வருகிறது.  அந்த நிறுவனத்துக்கு தற்போது எரிபொருளை விற்க அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.    இதுவரை சிறிய அளவில் பெட்ரோல் தயாரித்து சில்லறை விற்பனை செய்து வந்த இந்த நிறுவனம் இனி மொத்த விற்பனை செய்ய முடியும்.

அசாம் அரசு நிறுவனமான அசாம் கேஸ் நிறுவனம் எரிவாயு போக்குவரத்து வர்த்தகத்தைக் கவனித்து வருகிறது.   தற்போது இந்நிறுவனத்துக்கு எரிபொருள் விற்பனை செய்ய அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  கடந்த 2020ஆம் வருடம் புதியதாக நிறுவப்பட்ட ஆன்சைட் எனர்ஜி என்னும் நிறுவனத்துக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இதைப்போல் மேலும் எம் கே அக்ரோடெக் மற்றும் மானஸ் அக்ரோ இண்டஸ்டிரிஸ் ஆகிய நிறுவனங்களுக்கும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.