டெல்லி

த்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சகம் அயல்நாடுகளில் தமிழாசிரியர் பணி செய்ய இந்தி மற்றும் சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

செப்டம்பர் 15 ஆம் தேதி இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் கீழ் வரும் பண்பாட்டு உறவுகளுக்கான இந்திய கவுன்சில் (இந்தியன் கவுன்சில் ஃபார் கல்சுரல் ரிலேஷன்ஸ் – ஐசிசிஆர்) குறுகிய கால ஒப்பந்த அடிப்படையில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்கள் மற்றும் பண்பாட்டு மையங்களில் தமிழ் மொழி ஆசிரியர்களைப் பணியமர்த்துவதற்காக இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று, விளம்பரம் வெளியிட்டு அத்துடன் இணைய தளத்திலும் பதிவேற்றியுள்ளது. தகுதி, அனுபவம், விண்ணப்பப் படிவம், விதிமுறைகள், நிபந்தனைகள் போன்ற விவரங்களை ஐசிசிஆர் இணையதளத்தில் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விளம்பரத்தில் இந்தியும் சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டும்! கூடுதலாக வேறொரு அயல்நாட்டு மொழியும் தெரிந்திருக்க வேண்டும் என்றொரு நிபந்தனையும் உடனிருக்கிறது. இந்த விளம்பரத்தைப் பார்த்ததும் தமிழ் படித்தவர்களுக்கு, தமிழாசிரியர்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கப் போகிறது என்று நினைத்து, விண்ணப்பப் படிவத்தைத் தரவிறக்கிப் படித்துப் பார்த்தால் நிச்சயம் பெரும்  ஏமாற்றமே மிஞ்சும்.

பொதுவாக ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவசியம் ஆனால் இந்தியும் சமஸ்கிருதமும் எதற்காகத் தெரிந்திருக்க வேண்டும்? என சமூக வலைதளங்களில் கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ள இந்த விளம்பரத்தைத் தமிழக அரசும், முதல்வர் மு.க. ஸ்டாலினும் தலையிட்டுத் திரும்பப் பெறச் செய்ய வேண்டும் எனத் தமிழகத்திலுள்ள கல்வியாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.