டெல்லி:
உணவில் வெடிபொருட்களை கலந்து கொடுப்பது நமது கலாச்சாரமே இல்லை என்றும், கொடூரமாக யானையை கொலை செய்த நபர்களை சும்மா விட மாட்டோம் என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் கொந்தளித்து உள்ளார்.
உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, கேரள மாநிலத்தில் பசியால் திரிந்த யானை, அன்னாசி பழத்துக்குள் வைக்கப்பட்ட வெடி காரணமாக தாடை, நாக்கு சிதைந்து பரிதாபமாக ஜலசமாதி அடைந்தது. அந்த யானைக்கு நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், அதன்ப வயிற்றில் ஒரு குட்டி இருந்தது கண்டறியப்பட்டது.
இதுபற்றி வனத்துறை அதிகாரி மோகன் கிருஷ்ணன் என்பவர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டதன் மூலம், இந்த பிரச்சினை உலகுக்கு தெரிய வந்தது.
கர்ப்பிணி யானையை வெடிபொருட்கள் கொண்ட பழத்தை கொடுத்த கொலை செய்துள்ள விவகாரம் கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. மத்தியஅரசும் கேரள அரசிடம் விவரம் கோரியுள்ளது.
இந்த நிலையில், யானை கொல்லப்பட்டு தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் இந்த விவகாரத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து டிவிட் பதிவிட்டுள்ள அமைச்சர், கேரள மாநிலம் மலப்புரத்தில் யானை கொல்லப்பட்ட விவகாரத்தை மத்திய அரசு மிகவும் தீவிரமாக கண்காணித்து வருகிறது. இந்த விஷயத்தில் உரிய விசாரணைக்கு உத்தரவிடப்படும். சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். உணவில் வெடிபொருட்களை கலந்து கொடுப்பது இந்திய கலாச்சாரமே இல்லை என்று கூறி உள்ளார்.
யானை கொல்லப்பட்ட விவகாரத்தில், குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவி செய்தால் ரூ.50 ஆயிரம் சன்மானம் அளிக்கப்படும் என்று தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்து உள்ளது. இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் Change.org என்ற இணையதளம் மூலம் யானையின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் கையெழுத்திட்டவர்களில் எண்ணிக்கை, அதன் இலக்கான 5 லட்சத்தை எட்டியிருப்பதாக கூறப்படுடீகிறது.
மேலும், கர்ப்பிணி யானை கொல்லப்பட்ட விவகாரம் குறித்து பிரபல கிரிக்கெட்வீரர்கள் சச்சின், கோலி உள்ளிட்ட பிரபலங்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.