டெல்லி
வரும் 1 ஆம் தேதி முதல் டெல்லியில் காலாவதியான வாகனங்களுக்கு எரிபொருள் வழங்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது.

அரசு தொடர்ந்து டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. காற்று மாசு அதிகரிப்பதற்கு பழைய வாகனங்களில் இருந்து வெளியேறும் புகை முக்கிய காரணமாக உள்ளது. எனவே 10 ஆண்டுகளை கடந்த டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளை கடந்த பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்த டெல்லியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதுபோன்று டெல்லியில் சாலையில் இயக்கப்படும் வாகனங்களைக் கண்டறிந்து, பறிமுதல் செய்யப்பட்டு உடைப்பதற்கு அனுப்பப்படுகிறது., வெளிமாநிலங்களில் இருந்து டெல்லிக்குள் நுழையும் இதுபோன்ற வாகனங்களுக்கு முதல் முறையாக அபராதம் விதிக்கப்படுகிறது. அதே தவறை மீண்டும் செய்தால், வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.
காலாவதியான வாகனங்களுக்கு டெல்லியில் உள்ள பங்க்குகளில் பெட்ரோல், டீசல் வழங்குவதை ஜூலை முதல் நிறுத்துமாறு கடந்த ஏப்ரல் மாதம் மத்திய அரசின் காற்று தர மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. வரும் ஜூலை 1 முதல் இந்த உத்தரவு அமலுக்கு வருகிறது.
டெல்லியில் மொத்தம் 62 லட்சம் காலாதியான வாகனங்கள் உள்ள நிலையில், அதில் 41 லட்சம் இருசக்கர வாகனங்களும், 18 லட்சம் 4 சக்கர வாகனங்களும் உள்ளன. இவ்வாகனங்களுக்கு இனி பெட்ரோல், டீசலை பெட்ரோல் பங்குகள் வழங்காது. இதற்காக 500-க்கும் மேற்பட்ட ‘பங்க்’களில் சிறப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.